கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழாவும், கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றது.
ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய மாணிக்கம் உதயகுமார் கலந்து சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அல்மேடா, மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.நல்லதம்பி, மூத்த கலைஞர் மு.கணபதிப்பிள்ளை ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்பு நடனமாக உலகநாச்சியார் நாட்டுக்கூத்து ஆடப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இதன்போது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் மண்முனைப்பற்றின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் சிகரம் என்னும் நூல் வெளியிடப்பட்டதுடன் மண்முனைப்பற்று பிரதேசத்தில் கலைத்துறை, இலக்கியதுறை மற்றும் வைத்திய துறைக்கு பங்களிப்பு செய்த ஐந்து கலைஞர்கள் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கலாசார விழாவினையொட்டி கலைக்கழகங்கள்,மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் இதன்போது அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின்போது கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றமை சிறப்பம்சமாகும். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மண்முனைப்பற்று வயோதிபர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.












