
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் எட்டாவது பிரதேச செயலாளராக எட்டு ஆண்டுகள் (2016 - 2024) எமது பிரதேசமானது நிலைபேறான அபிவிருத்தியை அடையும் நோக்கில் தன்னாலான அர்ப்பணிப்பு மிக்க பக்கச்சார்பற்ற சேவை வழங்கி பிரதேசத்தின் கலை, கலாசாரம், விளையாட்டு என பல்துறைகளிலும் அனைத்து சேவைகளும் பிரதேச மக்களை சென்றடையும் வகையில் கண்ணியமான, நேர்த்தியான சேவையாற்றிய பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் பிரியாவிடை நிகழ்வு 2024.01.05 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது நலன்புரிச் சங்க உறுப்பினர்களால் எமது பிரதேச செயலாளர் அவர்கள் பொன்னாடை போர்த்தி, மலர்மாலைகள் மற்றும் மலர்செண்டுகள், நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டபோது நலன்புரிச்சங்கத்தினால் தனக்கென வழங்கப்பட்ட அன்பளிப்பு கொடுப்பனவினை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிரதேச கலைஞர்களுக்காக நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கு அளப்பெரிய சேவையினை வழங்கிய மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய எமது பிரதேச செயலாளர் அவர்கள் அரச சேவையில் ஏறத்தாழ 30 வருடங்களும் இலங்கை நிர்வாக சேவையில் 20 வருடங்களும் அர்ப்பணிப்புடன் தனது சேவையினை ஆற்றியவராவார்.
இவரது சேவைக் காலத்தில் இலங்கை நிர்வாக சேவையில் உதவி செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு - கிழக்கு மாகாணம், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம் - மட்டக்களப்பு, மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் (நிர்வாகம்), மாகாண கல்வி திணைக்களம் - கிழக்கு மாகாணம், உதவி செயலாளர், கல்வி அமைச்சு - கிழக்கு மாகாணம், மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் (நிர்வாகம்), சுகாதார திணைக்களம் - கிழக்கு மாகாணம், பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - மண்முனை தென்மேற்கு மற்றும் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - மண்முனைப்பற்று ஆகிய திணைக்களங்களில் உயர் பதவிகளில் தனது சேவையினையாற்றிய இவர் தற்போது மண்முனைமேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்வது பெருமைமிக்க விடயமாகும். இருப்பினும் சிறந்த ஆளுமை மற்றும் தலைமைத்துவம் கொண்ட எமது பிரதேச செயலாளர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வது மண்முனைப்பற்று பிரதேசத்திற்கும் பிரதேச செயலகத்திற்கும் பாரிய இழப்பாகும் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மையே..!!!
















